செய்திகள்

சதுரகிரி மலையில் கட்டுமான பணிகளுக்கு கழுதைகளை பயன்படுத்த தடை: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-08-08 16:58 IST   |   Update On 2017-08-08 16:58:00 IST
சதுரகிரி மலையில் கட்டுமான பணிகளுக்கு கழுதைகளை பயன்படுத்த தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது சதுரகிரி வனப்பகுதி. இங்குள்ள மலைமேல் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கசுவாமி கோவில் உள்ளது. அமாவாசை மற்றும் விசே‌ஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

சதுரகிரி மலைப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றும் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க மலைப்பகுதியில் கண்காணிப்பு கோபுரம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விருதுநகரைச் சேர்ந்த முருகன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், சதுரகிரி வனப்பகுதி சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக விளங்கி வருகிறது. இங்கு கண்காணிப்பு கோபுர கட்டுமான பணிக்கு வீட்டு விலங்கினமான கழுதையை பயன்படுத்தி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.

கழுதையை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவதால் வன உயிரினங்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழுதையை பயன்படுத்தி கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கழுதை மற்றும் எந்த வீட்டு உயிரினத்தையும் வன உயிரின சரணாலய பகுதிக்குள் அனுமதிக்க கூடாது என இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Similar News