செய்திகள்

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2017-08-08 14:34 IST   |   Update On 2017-08-08 14:53:00 IST
கிரானைட் ஊழலை விசாரித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

மதுரை மாவட்டத்தில் அரசு நிலங்களில் சட்ட விரோதமாக கிரானைட் குவாரிகள் நடைபெறுவதாகவும், இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை, சட்ட ஆணையராக நியமித்தது. அவர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், சட்டவிரோதமாக நடந்த கிரானைட் குவாரிகள் மூலம் அரசுக்கு ரூ.1.16 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

பின்னர், இந்த வழக்கு அவ்வப்போது விசாரணைக்கு வந்து கொண்டிருந்தது.

கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சகாயம் தலைமையிலான விசாரணை ஆணையத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட்டு பரிசீலித்தது. விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அரசிடம் ஜூலை 31ந் தேதிக்குள் ஒப்படைக்கும்படி அதிகாரி சகாயத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் புதிய மனு ஒன்றை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து அரசிடம் ஒப்படைக்க ஆகஸ்டு 31ந் தேதி வரை கால அவகாசம் வேண்டும்.

இந்த கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக விசாரித்த எனக்கு பலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

என்னுடைய விசாரணையின்போது அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுக்கும் இதுபோல கொலை மிரட்டல் வருகிறது. எனவே, என்னுடைய விசாரணை கமி‌ஷனில் இடம் பெற்ற அனைவரது பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரணையை செப்டம்பர் 14ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Similar News