செய்திகள்

புதுவை அமைச்சர் கந்தசாமிக்கு கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை

Published On 2017-08-08 13:52 IST   |   Update On 2017-08-08 13:52:00 IST
‘நிதி முறைகேட்டை வெளிப்படுத்துவேன்’ என்று புதுவை அமைச்சர் கந்தசாமிக்கு கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

குஜராத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கார் மீது கல்வீசி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த சனிக்கிழமை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கந்தசாமி, கவர்னர் கிரண்பேடியை கடுமையாக விமர்சித்தார். கவர்னரால் புதுவை அரசே முடங்கி இருக்கிறது. ஏற்கனவே விமான சேவை திட்டத்தை நிறுத்துவதற்கு முயன்றார். இப்போது துறைமுக திட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சிக்கிறார் என்று கூறினார்.

இதற்கு கவர்னர் கிரண்பேடி ஆட்சேபனை தெரிவித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

அமைச்சர் கந்தசாமி தொடர்ந்து என் மீது தவறான தகவல்களை பரப்புகிறார். இதன் மூலம் மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்.

இது போன்ற செயல்களை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

விமான நிலைய திட்டத்தில் என்ன நடந்தது, அதில் நிதி முறைகேடு ஏதும் நடந்ததா? என்பது பற்றி முறையாக ஆய்வு செய்து அனைத்து விவரங்களும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும். விமான சேவை திட்டம் தொடர்பாக வந்த கோப்புகளை கவர்னர் அலுவலகம் முழுமையாக ஆய்வு செய்யவில்லை.

புதுவையில் செலவிடப்படும் பல கோடி ரூபாய் பணத்தை உரிய முறையில் பாதுகாப்பதற்காக கவர்னர் அலுவலகம் தலையிடுகிறது. மேலும் இதுபல்வேறு விசாரணைக்கும் ஆளாகக்கூடிய ஒன்றாகும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் கந்தசாமி கவர்னரை மீண்டும் விமர்சித்து பேசினார். நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:-

துறைமுக திட்டத்தை முடக்க சதி நடக்கிறது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் புதுவை மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள். வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ள சிலர் மக்கள் மீது அக்கறை இருப்பதுபோல காட்டிக்கொண்டு திட்டங்களை தடுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

புதுவை துறைமுகத்தில் தூர்வாரும் பணிக்கு அரசு எந்த உத்தரவும் அளிக்கவில்லை. கவர்னர் நேரடியாக தலையிட்டு மத்திய அரசின் துறைமுக கழகம் மூலம் தூர்வாரும் பணிக்கு உத்தரவிட்டார். கவர்னர் உத்தரவின்பேரில்தான் தூர்வாரும் பணி நடந்தது. அப்படியிருக்க தூர்வாரும் பணியில் ஊழலும், முறைகேடுகளும் நடைபெறுவதாக கவர்னர் குற்றம்சாட்டியுள்ளார்.

அப்படியென்றால் அவர் அனுமதித்த பணியில் ஊழல் நடந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறாரா? மக்கள் மத்தியில் வேண்டும் என்றே திட்டமிட்டு காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கவர்னர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எத்தனை சதி திட்டங்கள் தீட்டினாலும் துறைமுக திட்டத்தை நிச்சயம் நாங்கள் செயல்படுத்துவோம்.

ஏனெனில் இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் வளர்ச்சி காண்பதோடு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். இதை தடுப்பதை முறியடிப்போம். கவர்னர் மீது அபாண்டமாக குறைகூற எனக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கிடையாது. என்னுடைய துறைகளின் கீழ் உள்ள திட்டங்கள் பலவற்றை கவர்னர் முடக்கி வைத்துள்ளார்.

இலவச அரிசி, முதியோர் பென்‌ஷன், விவசாய கடன் தள்ளுபடி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு முழுமையான கல்வி நிதி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் என் துறைகளை சார்ந்தது. இதற்கான கோப்புகளுக்கு அனுமதி தராமல் காலம் கடத்துகிறார். அதன்பேரில்தான் நான் குற்றம்சாட்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News