செய்திகள்

இளைஞர்கள் வேகத்துடன் செயல்பட்டு 50 லட்சம் உறுப்பினர்களை காங்கிரசில் சேர்க்க வேண்டும்: திருநாவுக்கரசர்

Published On 2017-08-05 15:36 IST   |   Update On 2017-08-05 15:36:00 IST
இளைஞர்கள் புத்துணர்வுடனும், வேகத்துடனும் செயல்பட்டு கட்சியை வளர்க்க வேண்டும். 50 லட்சம் உறுப்பினர்களை காங்கிரசில் சேர்க்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் பேசினார்.

ஈரோடு:

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் ஈரோடு மணல்மேட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம். பழனிச்சாமி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் வரவேற்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி பாரம்பரியம் மிக்க கட்சி. பிரதமராக இருந்த இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் நாட்டுக்காக தங்கள் உயிரை தந்துள்ளனர்.இருப்பினும் எதற்கும் பயப்படாமல் சோனியாவும், ராகுல்காந்தியும் காங்கிரஸ் கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் பாடுபட்டு வருகிறார்கள்.

எந்த கட்சியையும் நான் பெயர் சொல்ல விரும்ப வில்லை. சில கட்சிகள் ஜாதி, மத உணர்வுடன் செயல்படுகிறது. ஆனால் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் ஏற்கும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது.

தற்போது இளைஞர்கள் புதிய மாவட்ட காங்கிரஸ் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் புத்துணர்வுடனும், வேகத்துடனும் செயல்பட்டு கட்சியை வளர்க்க வேண்டும். 50 லட்சம் உறுப்பினர்களை காங்கிரசில் சேர்க்க வேண் டும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் பேசினார்.

Similar News