செய்திகள்

அரியலூர் அருகே கழிவறை மானியம் பெற லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

Published On 2017-07-27 13:49 GMT   |   Update On 2017-07-27 13:49 GMT
அரியலூர் அருகே தனி நபர் கழிவறை கட்ட லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள நாகம்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 50), விவசாயி. இவர் தனது வீட்டில் சுகாதார திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறை கட்டுவதற்கு முடிவு செய்தார்.

இதற்காக ஆண்டிமடம் ஒன்றிய அலுவலகத்தில் திட்ட வட்டார ஒருங்கினைப்பாளராக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ரத்தினசிகாமணியை அணுகினார். அவரிடம் தனக்கும், தனது உறவினருக்கும் சேர்த்து தனிநபர் கழிவறை கட்டுவதற்கான மானியம் பெற இரண்டு விண்ணப்பங்கள் வாங்கினார்.

கழிவறை கட்டுவதற்கு அரசு மானியம் ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணத்தை பெறுவதற்காக ஒரு கழிவறைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் இரண்டு பேருக்கும் சேர்த்து ரூ.4 ஆயிரம் கொடுக்கவேண்டும் என்று அதிகாரி கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராதாகிருஷ்ணன் அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசாரின் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை நேற்று ராதாகிருஷ்ணன் ரத்தினசிகாமணியிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மாறு வேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ் பெக்டர் சசிகலா தலைமையிலான போலீசார் ரத்தின சிகாமணியை கையும், களவுமாக கைது செய்தனர். அவரை விசாரணைக்காக அரியலூருக்கு அழைத்து சென்றனர். இதனால் ஆண்டிமடம் ஊராட்சி ஒன் றிய அலுவலகம் முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

திறந்தவெளி கழிப்பிடத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு செயல் படுத்தி வரும் கழிவறை மானிய திட்டத்திலும் லஞ்சத்தை எதிர்பார்க்கும் அதிகாரிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கூடியிருந்த பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறினர்.

Tags:    

Similar News