செய்திகள்

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ பெண்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-07-19 15:08 IST   |   Update On 2017-07-19 15:08:00 IST
கருவாடு விற்பனையில் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி பழையாறு துறைமுகத்தில் மீனவ பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு தினமும் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனை செய்ததுபோக, மீதமுள்ள மீன்களை கருவாடாக உலர வைத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

கருவாடு உலர வைத்தல், அதனை வியாபாரம் செய்தல் போன்ற பணிகளில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். கருவாடு உலர வைக்கும் பணியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தினமும் பழையாறு துறைமுகத்தில் இருந்து சுமார் 5 டன் முதல் 8 டன் வரை தினமும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் கருவாடு விற்பனைக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனை உடனடியாக ரத்து செய்யக்கோரி பழைய துறைமுகத்தில் நேற்று தி.மு.க. மீனவர் அணியின் நாகை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மீனவ பெண்கள் மற்றும் கருவாடு வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், கருவாடு அழுகக்கூடிய உணவு வகையை சேர்ந்தது. இதன் விலை தினமும் மாறுபடுகிறது. பழையாறு துறைமுகத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் கருவாடு விற்பனை செய்து வருகின்றனர். இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட இதர செலவுகள் போக லாபம் மிக குறைவாகவே கிடைக்கிறது.

இந்தநிலையில் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் கருவாடுகளை வாங்க மறுக்கின்றனர். இதனால் கருவாடுகள் விற்பனையாகாமல் தேங்கி உள்ளன. மேலும், துறைமுகத்தில் கருவாடு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு கருவாடு விற்பனையில் விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Similar News