செய்திகள்

பணியாளர்கள் இல்லாததால் பள்ளி விடுதி கழிவறையை சுத்தம் செய்யும் மாணவிகள்

Published On 2017-07-07 16:00 IST   |   Update On 2017-07-07 16:00:00 IST
காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளி விடுதி கழிவறையை சுத்தம் செய்வதற்கான பணியாளர்கள் இல்லாததால் மாணவிகள் சுத்தம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேலவன்னியூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் அருகே மாணவிகளுக்காக விடுதியும் உள்ளது.

இந்த விடுதியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் 34 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

விடுதியில் காப்பாளரோ, விடுதியை சுத்தம் செய்வதற்கான ஆட்களோ இல்லை. சமையல் செய்யும் பெண் ஒருவர் மட்டுமே மாணவிகளுடன் தங்கி வருகின்றார்.

தற்போது இந்த விடுதியில் சுத்தம் செய்வதற்கான பணியாளர்கள் இல்லாததால் விடுதி வளாகம் மற்றும் கழிவறையை மாணவிகளே சுத்தம் செய்கின்றனர்.

இது குறித்து மாணவிகள் கூறும்போது, கழிவறையை சுத்தம் செய்ய கஷ்டமாக உள்ளது. இங்கு குளிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை. எனவே உப்பு நீரில் குளித்து வருகிறோம். குடிநீருக்காக அருகில் உள்ள கைப்பம்பு மூலம் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து குடிக்கிறோம். இங்கு மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் அவதியடைந்து வருகிறோம். விடுதியை சுற்றிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து புற்கள் மண்டி உள்ளது. எனவே வி‌ஷ பாம்பு விடுதிக்குள் வந்து விடுகின்றன.

எனவே மாவட்ட கலெக்டரும், பள்ளி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுதியில் போதுமான வசதிகள் செய்து தர வேண்டும், விடுதியை கவனிக்க வார்டன் மற்றும் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.

Similar News