செய்திகள்

பாலத்தின் தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து: காதலி கண் முன்பு சென்னை வாலிபர் பலி

Published On 2017-07-05 12:16 IST   |   Update On 2017-07-05 12:16:00 IST
திட்டக்குடி அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் காதலி கண் முன்பு சென்னை வாலிபர் பலியானார். இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்:

சென்னை மணலியை சேர்ந்தவர் அப்துல்மாலிக். துணி வியாபாரி. இவரது மகன் ஹாதிக்அஸ்ரத் (வயது 17). பிளஸ்-2 படித்து வந்தார்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த அகமத்துல்லா என்பவரது மகள் ஷானேஸ் (17) என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் காதலர்கள் இருவரும் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஹாதிக் அஸ்ரத்துக்கு சொந்தமான காரில் மகாபலிபுரம், புதுவை ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். காரை ஹாதிக் அஸ்ரத் ஓட்டி வந்தார்.

பின்னர் புதுவையில் இருந்து கேரளாவுக்கு காரில் புறப்பட்டனர். அவர்கள் சென்ற கார் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஹாதிக்அஸ்ரத் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். ஷானேஸ் படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரின் இடிபாட்டிற்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த ஷானேசை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News