செய்திகள்

கந்துவட்டி கொடுமை: கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி

Published On 2017-07-03 17:35 IST   |   Update On 2017-07-03 17:35:00 IST
கந்து வட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் கணவன்- மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 58). விவசாயி. இவரது மனைவி தவமணி (50). இவர்கள் இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்களது கையில் மண்எண்ணை கேன் வைத்திருந்தனர்.

திடீரென்று கணவன்- மனைவி இருவரும் தங்களது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் தீக்குளிக்க முயன்றதாக கூறி கண்ணீர் விட்டு கதறினர். பின்னர் போலீசாரிடம் மனு கொடுத்தனர்.

பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரிடம் நாங்கள் ரூ.1 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கினோம்.

2 மாதங்களாக வட்டி பணம் கொடுத்தோம். அதன் பின்பு எங்களால் வட்டி பணத்தை கொடுக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து அன்பழகன், எங்களது நிலத்தை கிரையம் செய்து கொண்டார்.

அதன் பின்பு நாங்கள் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தை அன்பழகனிடம் கொடுத்தோம். ஆனால், அவர் வட்டி 3 லட்சமாக ஆகிவிட்டது. 3 லட்சம் ரூபாய் தந்தால்தான் நிலத்தை திரும்ப தர முடியும் என்றார். நாங்கள் பலமுறை சென்று கேட்டும் அவர் நிலத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்தார்.

எங்களது குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். நிலத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்து வட்டி கொடுமையால் கலெக்டர் அலுவல கத்தில் கணவன்- மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News