செய்திகள்

விருத்தாசலம் தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாய்-குழந்தை பலி

Published On 2017-06-30 15:45 IST   |   Update On 2017-06-30 15:45:00 IST
விருத்தாசலம் தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் இறந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்:

விருத்தாசலம் பெரியவடவாடியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி அமுதா(32). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அமுதா விருத்தாசலம் ஜங்‌ஷன் சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு பிறந்த பெண் குழந்தை இறந்தது. அப்போது அமுதாவிற்கு ரத்த கசிவு நிற்காமல் சென்றுள்ளது. டாக்டர்கள் சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி அமுதாவும் இறந்து விட்டார்.

பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் இறந்த தகவல் அப்பகுதியில் பரவியது. இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அய்யாயிரம் தலைமையில் மருதையன், ராஜ்குமார், ரவி, முருகன், சுப்புஜோதி மற்றும் அமுதாவின் உறவினர்கள் அந்த பகுதிக்கு திரண்டு வந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

அமுதாவிற்கு டாக்டர்கள் தாமதமாக வந்து சிகிச்சையளித்ததால்தான் அமுதாவும், அவரது குழந்தையும் இறந்து விட்டதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின் சமாதானம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு சம்பவத்திற்கு காரணமான டாக்டர்கள் மீதும், மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்க கோரி விருத்தாசலம் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News