செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி மோதி வாலிபர் பலி: பெண் போலீஸ் கால்கள் முறிந்தன

Published On 2017-06-22 14:14 IST   |   Update On 2017-06-22 14:14:00 IST
வண்டலூர் மேம்பாலத்தில் தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் வாலிபர் பலியானார். பெண் போலீசுக்கு கால்கள் முறிந்தன. இந்த விபத்துக்கு காரணமான டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி:

சென்னை ஆவடி போலீஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயலதா(39). இவர் சென்னை வண்டலூர் அடுத்த ஊனைமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமியில் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் பணியை முடித்துவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பினார்.

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள ஓட்டேரி மேம்பாலத்தில் சென்றார். இவரது பின்னால் சென்னை மேற்கு சைதாப்பேட்டை விஎஸ்எம் கார்டன் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ரமேஷ்(43) மற்றொரு பைக்கில் சென்றார்.

அப்போது மீஞ்சூரிலிருந்து வண்டலூர் நோக்கி மேம்பாலத்தில் தாறுமாறாக வந்த லாரி இரண்டு பைக்குகள் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் வந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.



மற்றொறு பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் போலீஸ் விஜயலதா மேம்பாலத்திலிருந்து சர்விஸ் சாலையின் கீழே விழுந்து இரண்டு கால்களை இழந்தபடி உயிருக்காக போராடினார்.

கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கவேல் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிய பெண் போலீஸ் ஏட்டு விஜயலதாவை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான லாரி டிரைவரை தேடிவருகின்றனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பக்கத்திலும், மேம்பாலத்திலும் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Similar News