செய்திகள்

ராணுவ வீரர் என்று ஏமாற்றி திருமணம் செய்ததால் புதுப்பெண் தற்கொலை

Published On 2017-06-20 13:27 IST   |   Update On 2017-06-20 13:27:00 IST
பரோட்டா மாஸ்டராக வேலைசெய்யும் கார்த்திக் ராணுவ வீரர் என்று கூறி, ஏமாற்றி திருமணம் செய்ததால் புதுப்பெண் தற்கொலை கொண்டார். அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகிறார்கள்.
அரக்கோணம்:

வேலூர் மாவட்டம் பாணாவரம் சூரை கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். சென்னையில் உள்ள ஸ்டார் ஓட்டலில் தச்சுத் தொழில் செய்கிறார். இவரது மகள் முத்துலட்சுமி (19).

குமரவேல், வேலைக்கு சென்று வருவதற்கு வசதியாக தனது குடும்பத்தினருடன் அரக்கோணத்தை அடுத்த பாப்பான்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். ஆற்காடு அடுத்த கரடிகுப்பத்தை சேர்ந்த கார்த்திக் முத்து லட்சுமியை பெண் பார்க்க வந்தார். அப்போது, தான் ராணுவத்தில் வேலை செய்வதாக கூறினார்.

இதையடுத்து, திருமண ஏற்பாடுகள் நடந்தது. அந்த சமயத்தில் கார்த்திக்கின் பாட்டி ஆண்டாள், பொய் சொல்லி திருமணம் செய்ய வேண்டாம் என்று கூறி பேரனை வற்புறுத்தினார்.

அதற்கு, ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்யலாம். இதில் ஏதும் தவறு இல்லை எனக்கூறிய கார்த்தியும், அவரது பெற்றோரும் பாட்டியை சமரசம் செய்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி கார்த்திக்குக்கும், முத்துலட்சுமிக்கும் திருமணம் நடந்தது.

அதன் பிறகு கார்த்திக் முத்துலட்சுமியிடம், ‘‘உன் வீட்டில் 5 பவுன் நகை மட்டுமே போட்டுள்ளனர். இதனால் என் பெற்றோர், உன்னிடம் பிரச்சினை செய்வார்கள். எனவே, நான் உங்களுடனேயே இருக்கிறேன்’’ என்று கூறி மாமியார் வீட்டிலேயே வீட்டோடு மாப்பிள்ளையாக கார்த்திக் தங்கினார்.

3 மாதம் கழித்து காஷ்மீர் செல்வதாக கூறி வீட்டை விட்டு கார்த்திக் சென்றார். ராணுவ வீரராக கணவர் இருப்பதாக நினைத்து, புதுப்பெண் முத்துலட்சுமி சந்தோ‌ஷமாக இருந்தார்.

ராணுவத்திற்கு செல்வதாக கூறிச் சென்ற கணவருக்கு பல முறை முத்துலட்சுமி போன் செய்தார். ஆனால், எப்போதும் போன் சுவிட்ச் ஆப் என்றே வந்தது.

இதனால் சந்தேகமடைந்த முத்துலட்சுமி விசாரித்ததில், கார்த்திக் ராணுவத்தில் வேலை செய்யாததும், சென்னையில் உள்ள ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்ப்பதும் தெரியவந்தது.

கணவரின் மோசடி குறித்து தெரியவந்ததால், முத்துலட்சுமி அதிர்ச்சியில் உறைந்தார். இதில் இடிந்து போன அவர், மனதை தேற்றிக் கொண்டு கணவரை தொடர்பு கொண்டார்.

ராணுவத்தில் வேலை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டிற்கு வாருங்கள் மீண்டும் சேர்ந்து வாழலாம் என்றுக் கூறி அழைத்தார்.

ஆனால், கார்த்திக் வரவில்லை. மேலும் ராணுவ வீரர் என பொய் சொன்னதும், ஓட்டலில் வேலை செய்யும் வி‌ஷயமும் அக்கம், பக்கத்து வீட்டாரிடம் பரவியது.

இதில் மனமுடைந்து காணப்பட்ட முத்துலட்சுமி வி‌ஷம் குடித்தார். பெற்றோர் அவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொய் சொல்லி திருமணம் செய்த கார்த்திக்கை தேடி வருகிறார்கள்.

Similar News