செய்திகள்
விபத்தில் சிக்கிய பஸ்சும், லாரியும் நொறுங்கி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ் மீது லாரி மோதல்: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பலி

Published On 2017-06-13 10:59 IST   |   Update On 2017-06-13 10:59:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ் மீது லாரி மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை அரசு பஸ் வந்தது. சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர்.

காலை 5 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் நிறுத்தத்தில் பஸ் நின்றது. பயணிகள் இறங்கி கொண்டு இருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் இருந்து நாவல்பழம் ஏற்றி வந்த மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சின் பின்பகுதியும், லாரியின் முன்பகுதியும் நொறுங்கியது. பின் இருக்கையில் இருந்த சென்னை ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் மற்றும் லாரியில் இருந்த மதனபள்ளியை சேர்ந்த வெங்கடேஸ்வரலு, கனகராஜ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் லாரி டிரைவர் ஸ்ரீநாத், மற்றும் லாரியின் பின்பக்கத்தில் இருந்த ஏழுமலை, வீரராகவன், ஆறுமுகம், மணி, வெங்கடேசன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 6 பேருக்கும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து ஏற்பட்டபோது பஸ்சின் பின்பக்க இருக்கையில் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மட்டும் இருந்து உள்ளார். இதனால் பஸ்சில் அவர் மட்டும் பலியாகி விட்டார். மற்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News