காஞ்சீபுரத்தில் பள்ளி மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை
காஞ்சீபுரம்:
வேலூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (24). இவருக்கும் காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரை சேர்ந்த 16 வயது மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்த மாணவி காஞ்சீபுரத்தில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர்களது திருமணம் காஞ்சீபுரம் ஜிலம்பி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் இன்று நடைபெற இருந்தது.
மைனர் பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதை அறிந்த ‘சைல்டு லைன்’ அமைப்பினர் காஞ்சீபுரம் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சங்கீதாவிடம் இதுகுறித்து புகார் செய்தனர்.
அதைத் தொடர்ந்து இன்று காலை பாலசெட்டி சத்திரம் போலீசார் உதவியுடன் திருமண மண்டபத்துக்கு அதிகாரி சங்கீதா வந்தார். அப்போது திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன.
அப்போது இரு வீட்டாரையும் அழைத்து அதிகாரி சங்கீதா பேசினார். ‘மைனர்’ பெண்ணுக்கு திருமணம் செய்வது சட்டவிரோதம் என எடுத்துக் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட இரு வீட்டினரும் இன்று நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தினர். இதுகுறித்து பாலசெட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.