செய்திகள்

அடுத்த முதல்வர் தினகரன் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு சுவரொட்டி

Published On 2017-06-10 13:52 IST   |   Update On 2017-06-10 13:52:00 IST
அம்மா மற்றும் சின்னம்மா ஆசியுடன் மிக விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள டி.டி.வி.தினகரனுக்கு வாழ்த்துக்கள் என்று காஞ்சிபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் முன்னாள் அதிமுக நகர செயலாளராகவும், மேற்கு மாவட்ட அம்மா பேரவையின் முன்னாள் இணை செயலாளராகவும் பதவி வகித்தவர். புல்லட் பரிமளம் தற்போது இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் காஞ்சீபுரம் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டரில் ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் அம்மா மற்றும் சின்னம்மா ஆசியுடன் மிக விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள டி.டி.வி.தினகரனுக்கு வாழ்த்துக்கள் இனி வெற்றி ஜெயம் அண்ணனால் அடையாளம் காட்டப்பட்டு நிதி அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த அண்ணன் டி.டி.வி.க்கு எதிராக பேட்டி கொடுப்பதை துரோகியே நிறுத்திக் கொள் நிதி அமைச்சர் பதவி என்பது அண்ணன் டி.டி.வி. கொடுத்த பிச்சைதான் எனவே அண்ணன் டி.டி.வி.யிடம் மன்னிப்பு கேள் ஒன்றரை கோடி தொண்டர்களிடம் மன்னிப்பு கேள் எச்சரிக்கை என்று நிதி அமைச்சராக உள்ள ஜெயகுமாரின் பெயரினை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்து அந்த போஸ்டரில் வாசகங்கள் உள்ளன. காஞ்சி நகர அதிமுகவினர் மற்றும் பொதுமக்களிடையே இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சுவரொட்டியை ஒட்டிய புல்லட் பரிமளம் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே காஞ்சிபுரம் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என காஞ்சீபுரம் நகர் முழுவதும் பேனர்கள் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். கடந்த மாதம் அ.தி.மு.க.விற்கு பொறுப்பேற்கும்படி டாக்டர் வெங்கடேஷ்க்கு அழைப்பு விடுத்து இவர் ஒட்டிய போஸ்டராலும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போது தினகரன் விரைவில் முதல்-அமைச்சர் ஆவார் என்று போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Similar News