செய்திகள்

வடலூரில் 15 வயது சிறுமியை கற்பழித்த தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்

Published On 2017-05-31 09:32 GMT   |   Update On 2017-05-31 09:32 GMT
வடலூரில் 15 வயது சிறுமியை கற்பழித்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூர் கருங்குழி காலனியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

சேகரின் தாயாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையொட்டி அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த 15 வயது சிறுமி அவருக்கு உதவிகள் செய்து வந்தார்.

அப்போது சேகர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

சில மாதம் கழித்து அந்த சிறுமி கர்ப்பமானார். இது குறித்து அவர் தனது தாயிடம் கூறினார். அவர் உடனே சேகர் வீட்டுக்கு சென்று அவரிடம் தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

ஆனால், சேகர் திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் தாயார் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசில் 9.7.2015 அன்று புகார் செய்தார். இதையொட்டி சேகரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இன்று அந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அரசு சார்பில் வக்கீல் பவானி வாதாடினார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கூலி தொழிலாளி சேகருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார்.
Tags:    

Similar News