செய்திகள்

சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம்

Published On 2017-05-30 14:52 IST   |   Update On 2017-05-30 14:52:00 IST
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடையை உடனே மூடுவதாக அதிகாரிகள் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தனர்.
சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இந்த கடைக்கு குடிபிரியர்கள் அதிகமான பேர் வந்தனர். இதனால் அப்பகுதி பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அந்த டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் கடையை மூடுவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவில்லை.

இதையடுத்து கடையை மூடக்கோரி கிராம மக்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் சிட்டிபாபு, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், கலைவாணன் மற்றும் கிராம மக்கள் பெரியநற்குணம் டாஸ்மாக் கடை அருகே திரண்டு வந்தனர். அங்கு சாமியானா பந்தல் அமைத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் கோட்ட கலால் அலுவலர்கள் விஜயா, சோமசுந்தரம், புவனகிரி துணை தாசில்தார் சிவகார்த்திகேயன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி கடையை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். ஆனால் உடனடியாக கடையை மூடாவிட்டால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கடையை உடனே மூடுவதாக அதிகாரிகள் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தனர். இதையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News