செய்திகள்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Published On 2017-05-23 12:25 GMT   |   Update On 2017-05-23 12:26 GMT
ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட ராசிங்காபுரம், தெப்பம்பட்டி, சித்தார்பட்டி ஆகிய பகுதியில் நிழற்குடைகள், சமுதாய கூடங்களை திறந்து வைப்பதற்காக ஆண்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் காரில் சென்று கொண்டிருந்தார்.

புதுப்பேட்டை பகுதியில் சென்ற போது அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அவரது காரை மறித்தனர். பின்னர் எங்களது பகுதியில் 1 மாதமாக குடிநீர் வரவில்லை. அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கோ‌ஷம் போட்டனர். இதனால் எம்.எல்.ஏ. அதிர்ச்சி அடைந்தார்.

உடனே காரைவிட்டு இறங்கிய எம்.எல்.ஏ. 2 நாளில் புதிய போர்வெல் அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார். அதன்பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து சித்தார்பட்டி பகுதியிலும் கிராம மக்கள் காலி குடங்களுடன் எம்.எல்.ஏ. காரை மறித்தனர். அப்போது பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் எங்களது பகுதியில் குடிநீர் சப்ளை இல்லை. தெருக்களில் கழிவு நீர் தேங்கி உள்ளது என புகார் தெரிவித்தனர்.

உடனே தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. இன்னும் 1 வாரத்தில் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல தெப்பம்பட்டி பகுதியிலும் விவசாயிகள் எம்.எல்.ஏ காரை மறித்து இந்த பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்க ஓடைகளில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த எம்.எல்.ஏ. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அரசு விழாவுக்கு வந்த இடத்தில் ஒட்டு மொத்தமாக மக்கள் முற்றுகையிட்டதை அறிந்த எம்.எல்.ஏ. இதுதொடர்பாக அதிகாரிகளை கடிந்து கொண்டு அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News