செய்திகள்

34 கூட்டுறவு பண்டக சாலைகளும் லாபத்தில் இயங்க நடவடிக்கை: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

Published On 2017-05-23 07:10 GMT   |   Update On 2017-05-23 07:10 GMT
தமிழகத்தில் உள்ள 34 கூட்டுறவு பண்டக சாலைகளும் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
மதுரை:

தமிழ்நாட்டில் உள்ள 34 நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலைகளில் மேலாண்மை இயக்குனர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில் நடந்தது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு செயல்படும் இந்த அரசு, மாநிலம் முழுவதும் உள்ள 32,715 நியாய விலைக்கடைகள் மூலம் விலையில்லா அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் மண்எண்ணை போன்ற கட்டுப்பாட்டுப் பொருட்கள் வினியோகம் செய்து வருகிறது.

மேலும் சிறப்பு, பொது வினியோக திட்டத்திற்கு வழங்கப்பட்ட மானியத்தை 2013-ம் ஆண்டுடன் மத்திய அரசு நிறுத்திக் கொண்ட போதிலும், அ.தி.மு.க. அரசு அந்த நிதிச்சுமையையையும் ஏற்றுக் கொண்டு, பொது மக்கள் பயன்படும் வகையில் ஒரு கிலோ பருப்பு ரூ. 30-க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ. 25-க்கும் விற்பனை செய்து வருகிறது.

2010-2011 முதல் 31-3-2017 வரையிலான காலத்தில் 34 நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மூலமாக கட்டுப்பாடற்ற பொருட்கள் ரூ. 4561 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கு ரூ. 878 கோடி அளவிற்கு குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு, அதனை முழுமையாக எய்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் நட்டத்தில் இயங்கிய நிலையை முற்றிலும் மாற்றி, நல்ல பல நடவடிக்கைகளை எடுத்ததின் பலனாக, தற்போது தமிழகத்தில் உள்ள 34 நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளில் 25 லாபத்தில் இயங்கி வருகின்றன.

இதர 9 கூட்டுறவு பண்டகசாலைகளும் லாபத்தில் செயல்பட வேண்டும் என பண்டக சாலைகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பொதுமக்களின் தேவையை அறிந்து அதிகளவு அம்மா மருந்தகங்கள், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், மேலாண்மை இயக்குநர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஏ.கே. போஸ் எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ஆனந்த், கூடுதல் பதிவாளர்கள் கே.ஜி. மாதவன், தேவகி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரைப்பாண்டியன், பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வில்லாபுரம் ராஜா, ஆவின் தலைவர் தங்கம், முன்னாள் மேயர் திரவியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News