செய்திகள்

அரசு பள்ளிகளில் படிக்கும் 92 லட்சம் மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் தயார்

Published On 2017-05-23 08:33 IST   |   Update On 2017-05-23 08:33:00 IST
92 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலை இல்லா பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. பள்ளிக்கூடம் திறந்த அன்றே புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:

கோடை விடுமுறை முடிந்து வருகிற 1-ந்தேதி அரசு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. வெயிலின்தன்மை அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக புதிய புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு தயாராக வைத்து உள்ளது. 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு என மொத்தம் 4 கோடியே 30 லட்சம் விலை இல்லா பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு உள்ளன.

இதில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கு உரிய பாடப்புத்தகங்கள் ஆகும். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பருவம் அல்லாத வகையில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.



அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 92 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இந்த விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதுநாள் வரை பாடப்புத்தகங்கள் பள்ளிக்கூட ஆசிரியர்கள் மூலம் வேன்கள் வைத்து பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு வரப்பட்டன.

ஆனால் இந்த வருடத்தில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு நேரடியாக பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. ஓரிரு தினங்களில் இந்த புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விடும் என்று தெரிகிறது. பள்ளிக்கூடம் திறந்த அன்றே புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Similar News