ஜப்தி செய்த டிராக்டரை விவசாயியின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க அரியலூர் கோர்ட்டு உத்தரவு
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியை அடுத்த ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அழகர் (வயது 33), விவசாயி. இவர் விவசாயம் செய்வதற்காக 2013-ல் பெரம்பலூரில் உள்ள தனியார் நிதிநிறுவனம் ஒன்றில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் ஒன்றை தவணை முறையில் எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில் ரூ.5 லட்சத்துக்கு மேல் கடன் தொகை செலுத்திவிட்டார். மீதமுள்ள பாக்கி தவணைத் தொகை கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டு 2016 மார்ச் 10-ந்தேதி தனியார் நிதி நிறுவனம் விவசாயி அழகரிடமிருந்த டிராக்டரை குண்டர்களைக் அழைத்து வந்து ஜப்தி செய்து எடுத்து சென்றனர்.
இதில் மனமுடைந்த அழகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தனியார் நிதி நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஜப்தி செய்த டிராக்டரை வழங்கக் கோரியும் அழகரின் தந்தை ஆறுமுகம் அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு தொடர்பாக கயர்லாபாத் போலீஸார், நிதி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந் தது. வழக்கை விசாரித்த நீதிபதி 15 மாதமாக தனியார் நிதி நிறுவனம் ஜப்தி செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் எந்த ஒரு உபயோக மில்லாமல் உள்ளது.
எனவே அந்த டிராக்டரை அழகர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும், மேலும், இவ்வழக்கு நிலுவையில் இருந்து வருவதால், விசாரணையின் போது டிராக்டரை தொடர்புடைய விவசாயி ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அழகர் தந்தை ஆறுமுகம் டிராக்டரை தனது வீட்டிற்கு எடுத்து சென்றார்.