செய்திகள்

அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்க வேண்டும்: டாக்டர் வெங்கடேசுக்கு ஆதரவாக போஸ்டர்

Published On 2017-05-05 15:43 IST   |   Update On 2017-05-05 15:44:00 IST
அ.தி.மு.க.வுக்கு டாக்டர் வெங்கடேஷ் தலைமை ஏற்க வேண்டும் என்று காஞ்சீபுரம் நகரம் முழுவதும் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
காஞ்சீபுரம்:

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வினர் சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வுக்கு டாக்டர் வெங்கடேஷ் தலைமை ஏற்க வேண்டும் என்று காஞ்சீபுரம் நகரம் முழுவதும் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அந்த போஸ்டரில் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மலர்தூவி டாக்டர் வெங்கடேசை வாழ்த்துவது போன்ற படத்துடன் ‘‘பாசறைக்கு தலைமை வகித்தவரே கழகத்திற்கும் தலைமை ஏற்க வாருங்கள். ஒன்றரைகோடி தொண்டர்களை வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் நீங்கள் தான். நீங்கள் தலைமை ஏற்க வேண்டும் என்பதே ஒன்றரைகோடி தொண்டர்களின் விருப்பம்’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த போஸ்டர் புல்லட் பரிமளம் என்பவர் பெயரில் ஓட்டப்பட்டு இருக்கிறது. காஞ்சீபுரம் நகர மன்றத்தில் இரண்டுமுறை அ.தி.மு.க. கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் புல்லட் பரிமளம். இவர் முன்னாள் அதிமுக நகர செயலாளராகவும், முன்ளாள் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராகவும் பதவி வகித்தவர்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது காஞ்சீபுரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்பே நகரின் முக்கிய பகுதியான காந்திரோட்டில் அதிமுக வேட்பாளர் 1 லட்சத்து 69 ஆயிரத்து 099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என பேனர் வைத்து பரபரப்பினை ஏற்படுத்தியவர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது காஞ்சீபுரத்தில் அரசு பேருந்தினை எரித்ததாக புல்லட் பரிமளம், அவரது மனைவி உமா மகேஷ்வரி ஆகியோர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உள்கட்சி மோதலால் புல்லட் பரிமளம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News