சென்னிமலையில் மதுக்கடையை இழுத்து பூட்டிய குடிமகன்கள்
சென்னிமலை:
சென்னிமலையில் பாட்டில் விலையினை விட அதிக விலைக்கு பிராந்தி விற்பதாக கூறி மது குடிப்பவர்கள் ஒருங்கிணைந்து விற்பனையாளர்களை மிரட்டி மது கடையினை மூடி தகராறு செய்தனர்.
பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் 6 மது கடைகள் மூடப்பட்டு விட்டது எந்த கடையினையும் பொதுமக்கள் மாற்று இடத்தில் திறக அனுமதிக்க வில்லை தற்போது டவுன் பகுதியில் ஊத்துக்குளி ரோடு, அரச்சலூர் ரோடு என இரண்டு இடத்தில் தான் கடை உள்ளது.
இந்த கடைகள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது இதையும் அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் அரச்சலூர் ரோட்டில் உள்ள கடையில் நேற்று மாலை 6 மணிக்கு குடிமகன்கள் திரண்டு வந்தனர். கேட்டும் சரக்கு கொடுப்பதில்லை அதுவும் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10, பீர் பாட்டிலுக்கு ரூ.20 அதிகம் பெறுகிறாய் என புகார் கூறி கடையில் விற்பனையில் இருந்த சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைசரிடம் தகராறு செய்தனர். பிறகு அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி கடையினை மூடி விட்டனர்.
இதற்கு இப்பகுதி மக்களும் ஆதரவு கொடுத்தனர். இது குறித்து டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் ‘குடி’ மகன்களிடம் சமதானம் பேசி மீண்டும் கடையினை திறந்தனர் இனி மேல் இங்கு பாட்டில் விலையினை விட அதிகம் கேட்க மாட்டார்கள் என குடி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தும் விற்பனையாளர், சூப்பர் வைசர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம் என கண்டிப்பு காட்டியும் சென்றார்.
இதனால் குடி மகன்களுக்கு ஏக கொண்டாட்டம். இந்த மது கடையினை அப்புறப்படுத்த கோரி விரைவில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என மக்கள் சபதம் எடுத்து உள்ளனர்.