செய்திகள்

எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க மேலும் எம்.எல்.ஏ.க்களை திரட்டி வரும் தோப்பு வெங்கடாச்சலம்

Published On 2017-05-04 10:06 IST   |   Update On 2017-05-04 10:06:00 IST
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வான தோப்பு வெங்கடாச்சலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க மேலும் எம்.எல்.ஏ.க்களை திரட்டி வருவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:

முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாச்சலம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் ஈரோடு மாவட்டத்தில் ஒரே அமைச்சராக இருந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்தார்.

தொடர்ந்து 2-வது முறையாக ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தனக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தார். பெருந்துறை தொகுதியில் மீண்டும் தோப்பு வெங்கடாச்சலம் அமோக வெற்றி பெற்றதையொட்டி அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு அதே சுற்றுச்சுழல் துறை அமைச்சர் பதவி பவானி தொகுதி எம்.எல்.ஏ கே.சி.கருப்பணனுக்கு வழங்கப்பட்டது. இதற்கு அப்போதைய நெடுஞ்சாலை துறை அமைச்சரும் இப்போது முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி காரணம் என்று கூறப்பட்டது.

தனக்கு கிடைக்க வேண்டிய அமைச்சர் பதவி நழுவி கருப்பணன் கைக்கு போய் விட்டதே என்று அப்போதே தோப்பு வெங்கடாச்சலம் இடிந்து போய்விட்டார். எனினும் அப்போது ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்ததால் வேறு வழியின்றி அமைதியாக இருந்து விட்டார். வழக்கம்போல் கட்சி பணி மக்கள் பணி என்று சுறுசுறுப்பாகத்தான் இருந்தார்.

ஆனால் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தில் மதிப்புமிக்க நபராக கே.ஏ.செங்கோட்டையன் திகழ்ந்தார். அவரை நம் பக்கம் வைத்து கொள்ள வேண்டும் என டி.டி.வி.தினகரனும் சசிகலாவும் நினைத்தனர். இதனால் புதிய மந்திரி சபையில் அவருக்கு பள்ளி கல்விதுறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி எந்த ஒரு கூட்டத்திலும் சரி எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த இடத்தில் கே.ஏ.செங்கோட்டையன் காணப்பட்டார். மீண்டும் அவரது செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.

இப்படி செங்கோட்டையனின் வளர்ச்சி ஈரோடு மாவட்டத்தில் ஒரே அமைச்சராக இருந்த பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலத்துக்கு கலக்கத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

புதிய மந்திரி சபையில் தனக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நம்பி இருந்த தோப்பு வெங்கடாச்சலத்துக்கு பெருத்த ஏமாற்றத்தையும் கொடுத்தது.

இதை வெளி காட்டத்தான் ஈரோட்டில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட  கல்லூரி விழாவை புறக்கணித்தார். இத்தனைக்கும் அவர் பெருந்துறையில்தான் இருந்தார். இதனால் எடப்பாடிக்கு எதிராக அவர் போர்க்கொடி தூக்கி இருப்பது உறுதியாகி விட்டது.

இதற்கிடையே மேலும் நெருக்கடி கொடுக்க தயாரான தோப்பு வெங்கடாச்சலம் தற்போது கொங்கு மண்டலத்தை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களை தனக்கு ஆதரவாக சேர்த்து அரசுக்கு எதிராக கொம்பு சீவி வருகிறார்.

ஈரோடு மாவட்டத்தில் தோப்பு வெங்கடாச்சலத்துடன் சேர்த்து மொத்தம் 8 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் இவருக்கு ஆதரவாக 2 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறினர். அவர்களில் ஒருவருக்கு தொகுதியில் போட்டியிட மேலிடத்திடம் சீட்டு வாங்கி கொடுத்தாராம். மேலும் இன்னொரு எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்தின் நண்பர் ஆவார்.

மேலும் தோப்பு வெங்கடாச்சலத்துடன் சேர்ந்து வெளியேற கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு முக்கிய எம்.எல்.ஏ.வும் இருப்பதாக கூறுகிறார்கள். இவர் முன்னாள் அமைச்சராகவும் இருந்தார். அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி போராட்டத்திலும் குதித்தவர்.

தோப்பு வெங்கடாச்சலத்திடம் முதலில் 5 எம்.எல்.ஏ.க்கள் இருந்ததாகவும் இப்போது அதிகமாகி 15 எம்.எல்.ஏ.க்கள் மறைமுக ஆதரவு தர இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறி உள்ளனர். இப்படி தனக்கு என்று ஆதரவு பட்டாளத்தை திரட்டி வரும் அவர் எப்போது கோதாவில் இறங்கப் போகிறாரோ... அப்போது தமிழக அரசியலில் சூறாவளி புயலை உண்டாக்கும் எனவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Similar News

வடம்- Movie Review