செய்திகள்
தஞ்சையில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. பேசியபோது எடுத்தபடம்.

6 மாதத்தில் தேர்தல் வரும் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது: வைத்திலிங்கம் எம்.பி.

Published On 2017-05-02 11:07 IST   |   Update On 2017-05-02 11:07:00 IST
தமிழகத்தில் 6 மாதத்தில் தேர்தல் வரும் என்ற மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது என தஞ்சையில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் தஞ்சை ஆப்ரகாம்பண்டிதர் சாலையில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட அ.தி.மு.க. (அம்மா அணி) மாணவரணி செயலாளர் காந்தி முன்னிலை வகித்தார். சங்க இணைச் செயலாளர் இளங்கோவன் வரவேற்றார்.

இதில் அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராஜன், வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் தங்கப்பன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், செய்தி தொடர்பாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

காவிரி பிரச்சனைக்காக இறுதிவரை போராடியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்க வேண்டும் என்று போராடினார். விவசாயிகளுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் விடிவுகாலம் ஏற்பட்டது.

தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் வேதனைப்பட்டனர். ஆனால் இப்போது விவசாயிகளுக்காக மு.க.ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். விவசாயிகள் நலனில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான் உண்மையான அக்கறை காட்டினர். மத்தியஅரசு வறட்சி நிவாரணம் வழங்குவதற்கு முன்பே தமிழகஅரசு விவசாயிகளின் வங்கி கணக்கில் வறட்சி நிவாரணத் தொகையை வரவு வைத்துள்ளது. பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு மீண்டும் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மறைந்தாலும் அவரை இதயத்தில் வைத்து, அவரது வழிகாட்டுதலின்படி தமிழகஅரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக இரு அணிகளாக பிரிந்து சென்றதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தி ஆட்சிக்கு வரலாம் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது. பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும். இழந்த இரட்டைஇலை சின்னத்தை மீட்க வேண்டும் என்பது 1½ கோடி தொண்டர்களின் விருப்பம்.

ஒரு அணியாக உள்ளாட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றோம் என்ற செய்தியை மறைந்த ஜெயலலிதாவின் ஆத்மா கேட்க வேண்டும். இரண்டாக பிரிந்த இயக்கம் ஒன்றுபட்டு மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் ஒரு அணியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் எஸ்.வைத்திலிங்கம், கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பிரசாத் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், முன்னாள் மாநகராட்சி உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் அண்ணா தொழிற்சங்க அவைத் தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

முன்னதாக ஆர். வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, இன்னும் 4 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி தொடரும். 6 மாதத்தில் தேர்தல் வரும் என்ற மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஒரே அணியாக இணைய வேண்டும் என்ற எண்ணம் விரைவில் நிறைவேறும் என்றார்.

Similar News