செய்திகள்

படிக்கும் காலத்தில் காவிரி ஆற்றை கடந்து கல்லூரிக்கு சென்று படித்து வந்தேன்: எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

Published On 2017-04-30 08:22 GMT   |   Update On 2017-04-30 08:22 GMT
நான் படிக்கும் காலத்தில் காவிரி ஆற்றை கடந்து கல்லூரிக்கு சென்று படித்து வந்தேன். அப்போது பாலமோ அதிக சாலை வசதியோ கிடையாது என்று ஈரோட்டில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
ஈரோடு:

ஈரோட்டில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.

மாணவர்கள் தவறான வழிக்கு செல்லாத வகையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். ஆசிரியர்- மாணவர்-பெற்றோர் உறவு ஒரு முக்கோண தத்துவத்தை போன்றது. ஒருவரையொருவர் புரிந்து அன்போது சகிப்புத்தன்மையோடு வாழ்ந்தால் மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு.

தமிழகம் வீறு பெற்று உலக அரங்கில் தனி சிறப்புடன் விளங்க வேண்டும் என்றால் உயர்கல்வி வளர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் மறைந்த ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

இங்கே இருக்கிற நான் மேலும் மற்ற அமைச்சர்கள் எல்லாம் விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள். எங்களது கடின உழைப்பால் இன்று உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறோம். உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். நான் படிக்கும்போது எனது சொந்த ஊரிலிருந்து 35 கி.லோ மீட்டர் தூரம் கடந்து கல்லூரிக்கு வர வேண்டும். அதுவும் காவிரி ஆற்றை கடந்துதான் வர வேண்டும். அப்போது பாலமோ அதிக சாலை வசதியோ கிடையாது. ஆனால் இப்போதோ 3 நிமிடத்துக்கு ஒரு பஸ் வருகிறது.

தமிழ்நாட்டில் இப்போது உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளி முதல் கல்லூரி வரை மாணவர்களுக்கு பல்வேறு அரசு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கல்விக்காக அதிக அளவில் அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் கல்லூரியில் புரட்சி-மறுமலர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

பெண்கள் அதிக அளவில் பட்டம் பெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இது மிகவும் பெருமையாக உள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
Tags:    

Similar News