செய்திகள்

பெருங்களத்தூரில் புதிய மதுக்கடை திறக்க பெண்கள் எதிர்ப்பு - முற்றுகை

Published On 2017-04-11 15:45 IST   |   Update On 2017-04-11 15:45:00 IST
பெருங்களத்தூரில் புதிய மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் புதிதாக அமைக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட்டனர்.


பெருங்களத்தூர் பஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் இருந்த 2 மதுக்கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது.

இதையடுத்து பெருங்களத்தூர், சதானந்தபுரம் சாலையில் புதிதாக 2 மதுக்கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

குடியிருப்புக்கு மத்தியில் திறக்கப்படும் இந்த மதுக்கடைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் புதிதாக அமைக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட்டனர்.

மதுக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், மாவட்ட துணைத் தலைவர் பொற்றாமரை சங்கரன், விஜயபாரதி, சுபாஷ் மற்றும் தி.மு.க.வினர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அப்போது சிலர் மதுக்கடை போர்டை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பீர்க்கன்கரணை போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Similar News