செய்திகள்

கோவில்பட்டியில் லாரி மோதி கல்லூரி மாணவி-மாணவர் பலி

Published On 2017-04-06 17:34 IST   |   Update On 2017-04-06 17:34:00 IST
கோவில்பட்டியில் தனியால் ஆலைக்கு தண்ணீர் ஏற்றி சென்ற லாரி மோதியதில் கல்லூரி மாணவி மற்றும் மாணவர் பரிதாபமாக பலியானார்கள்.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த காளிமுத்து என்பவரது மகள் பேச்சியம்மாள் (வயது23). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நேர்காணலில் கலந்து கொள்ள  நேற்று முன்தினம் கோவைக்கு சென்றார். பின்பு அங்கிருந்து ரெயில் மூலம் ஊருக்கு திரும்பிய அவர் நேற்று இரவு கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

பேச்சியம்மாளை அவரது சித்தப்பா கருத்தப்பாண்டியின் மகன் கார்த்திக்ராஜா (21) மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்து சென்றார். கார்த்திக்ராஜா கோவில்பட்டி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.3-ம் ஆண்டு படித்து வந்தார்.

ரெயில் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே வந்த அவர்கள் மீது வேலாயுதபுரத்தில் இருந்து தனியார் ஆலைக்கு தண்ணீர் ஏற்றி சென்ற லாரி மோதியது. இதில் கார்த்திக்ராஜாவும், பேச்சியம்மாளும் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டனர்.


அவர்களை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் லாரிக்கு அடியில் சிக்கியபடி கிடந்த இருவரையும் மீட்க முடியவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படைவீரர்கள் வரவழைக்கப்பட்டு இருவரும் மீட்கப்பட்டனர். ஆனால் பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திக்ராஜா மீட்கப்பட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து லாரிடிரைவர் தங்கராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News