செய்திகள்
பஸ்சின் பின்பகுதி தீ பிடித்து எரிந்து சேதமாகி இருப்பதை படத்தில் காணலாம்.

அம்மாபோட்டை அருகே சொகுசு பஸ் தீ பிடித்து எரிந்தது: 45 பயணிகள் உயிர் தப்பினர்

Published On 2017-04-03 13:25 IST   |   Update On 2017-04-03 13:25:00 IST
அம்மாபோட்டை அருகே சொகுசு பஸ் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 45 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஈரோடு:

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து திருப்பதிக்கு ஒரு சொகுசு (ஏ.சி) பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த சொகுசு பஸ்சில் திருச்சூர் பகுதியை சேர்ந்த 45 பயணிகள் இருந்தனர்.

பஸ்சை கெத்து (வயது 25) என்பவர் ஓட்டிக் கொண்டு வந்தார். இந்த பஸ் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள மாணிக்கம் பாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது பஸ்சின் பின்புறத்தில் இருந்து குபு...குபுவென புகை வெளியேறியது.

ஏதோ எரியும் வாடை வருகிறதே.. என்று டிரைவர் திரும்பி பார்த்தார். அப்போது பஸ்சில் புகை வருவதை கண்ட அவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். தூக்கத்தில் இருந்த பயணிகளை சத்தம் போட்டு எழுப்பினார்.

அதற்குள் பஸ்சின் பின்பகுதி தீ பிடித்து எரிந்தது இதை கண்ட பயணிகள் உடனே பஸ்சை விட்டு இறங்கினர். உடனடியாக இறங்க முடியாததால் பஸ்சின் இரு பக்க கண்ணாடியையும் உடைத்து கீழே குதித்தனர். 45 பயணிகளும் கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பஸ் தீ பிடித்து எரிந்ததை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் மற்றும் அப்பகுதி மக்களும் பஸ் பயணிகளுக்கு உதவி செய்தனர்.

பொதுமக்கள் மற்றும் பயணிகளால் உடனடியாக பஸ்சில் எரிந்த தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எரியும் பஸ்சை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். எனினும் பஸ்சின் பின்பகுதி முழுவதும் எரிந்து சேதம் ஆனது.

சொகுசு பஸ் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பஸ்சில் வந்த கேரள சுற்றுலா பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

Similar News