பூம்புகாரில் கண்ணகி சிலையிடம் மனுகொடுத்து விவசாயிகள் போராட்டம்
சீர்காழி:
தலைநகர் புதுடெல்லியில் கடந்த 13 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த துவங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பூம்புகார் கடலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தியதோடு அங்குள்ள கண்ணகி சிலையிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுப்படி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும், அனைத்து நதிகளை நீர்வழி பயணத்திட்டத்தின் மூலம் இணைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லியில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த 14-ந்தேதி முதல் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் போரட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், இந்த பிரச்சினையில் பிரதமர் மோடி உடனடி நடவடிக்கை எடுக்ககோரியும், தமிழக மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் இலங்கை அரசை கண்டித்தும், விவசாயிகளின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்ககோரியும் பூம்புகார் கடற்கரையில் உள்ள கண்ணகி சிலையிடம் மனு கொடுத்தும், கடலில் இறங்கியும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு விவசாய சங்கத்தலைவர் வடக்குதோப்புதுரை தலைமை தாங்கினார்.
இதில் நாகை வடக்கு மாவட்ட த.மா.கா. தலைவரும், விவசாய சங்க மாநில பொறுப்பாளருமான பூம்புகார் சங்கர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மேலும் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் கண்ணகி சிலையிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் அன்பு,முன்னோடி விவசாயிகள் நெடுஞ்செழியன், மோகன்குமார், ஆறுமுகம், வரதராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.