செய்திகள்

கடலூரில் வி‌ஷவாயு தாக்கி 3 பேர் பலி: குடிநீர் வடிகால்வாரிய என்ஜினீயர்கள் 2 பேர் சஸ்பெண்டு

Published On 2017-03-22 04:31 GMT   |   Update On 2017-03-22 04:31 GMT
கடலூரில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியானது தொடர்பாக வடிகால்வாரி என்ஜினீயர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர்:

கடலூரில் பாதாள சாக்கடை திட்ட குழாய்களை பராமரிக்கும் பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது. கடலூர் மோகினி பாலம் அருகே பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது வி‌ஷவாயு தாக்கி கடலூர் முதுநகரைச்சேர்ந்த ஜெயக்குமார், வேலு, புதுவை சோரியாங்குப்பத்தைச்சேர்ந்த முருகன் ஆகிய 3 தொழிலாளர்கள் பலியானார்கள். அவர்களது உடலை கைப்பற்றி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப்பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

3 பேர் பலியானது தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பணியாளர்களை அஜாக்கிரதையாக பணியில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையொட்டி தனியார் நிறுவன காண்டிராக்டர் ராமச்சந்திரன், திட்ட மேலாளர் ராவணன் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை சரியாக கவனிக்கத் தவறிய குடிநீர்வடிகால் வாரிய உதவி பொறியாளர் மாரியப்பா வினோத்ராஜ், உதவி நிர்வாக பொறியாளர் விஜயகுமார் ஆகிய 2 பேர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தீரஜ்குமார் பிறப்பித்தார்.

Similar News