செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே 60 அடி கிணற்றில் விழுந்து 15 வயது சிறுவன் பலி

Published On 2017-03-15 06:14 GMT   |   Update On 2017-03-15 06:14 GMT
ஆரல்வாய்மொழி அருகே 60 அடி கிணற்றில் விழுந்து 15 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நாகர்கோவில்:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் காளிதாஸ், (வயது 15), 10-ம் வகுப்பு படித்துள்ளார். தற்போது வேலை தேடிக் கொண்டிருந்தார். இதையடுத்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாலை ஒன்றில் இன்று வேலைக்கு செல்வதற்கு முடிவு செய்தார்.

இதற்காக நேற்றிரவு குமாரபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு காளிதாஸ் வந்திருந்தார். அங்கு அவர்களது உறவினர்கள் காவல்கிணறைச் சேர்ந்த முத்துகுமார் (14), சாத்தான் குளத்தைச் சேர்ந்தமாரி செல்வம் (16) ஆகியோரும் இருந்தனர்.

இன்று காலை காளிதாஸ், முத்துகுமார், மாரிசெல்வம் ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்து வெளியே சென்றனர். அப்போது அந்த பகுதியில் கிடந்த பாழாடைந்த கிணற்றை பார்த்தனர். எதிர்பாராதவிதமாக காளிதாஸ் கிணற்றில் தவறி விழுந்தார்.

இதைப்பார்த்த முத்துகுமார், மாரிசெல்வம் இருவரும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கிணற்றில் பிணமாக கிடந்த காளிதாஸ் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 60 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி உள்ளே இறங்கினார்கள். கிணற்றில் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தது. அங்கு பிணமாக கிடந்த காளிதாஸ் உடலை சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

காளிதாஸ் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். ஆரல்வாய்மொழி போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் காளிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News