செய்திகள்

ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்காக ரேசன் கார்டில் பெயர் பதிவுக்கு குழந்தைகளுக்கும் ஆதார் கட்டாயம்

Published On 2017-03-14 09:58 GMT   |   Update On 2017-03-14 09:58 GMT
ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்காக ரேசன் கார்டில் பெயர் பதிவுக்கு குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல்:

மாநில மின் ஆளுமை முகமையின் கீழ் ஆதார் உள்ளிட்ட இசேவைப் பணிகள் நடந்து வருகின்றன. மத்திய அரசு அனைத்து விபரங்களையும் மின் ஆளுமை பணிகளில் இணைத்து ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ரேசன் பயன்பாட்டுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க முன்னேற்பாடாக ரேசன் கடைகளுக்கு பி.ஓ.எஸ். (பாயிண்ட் ஆப் சேல்) மிஷின்கள் வழங்கப்பட்டு, விபரங்கள் பதிவேற்றப்பட்டன.

ஏப்ரல் முதல் வாரத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. இதனால் புதிதாக பிறந்தது முதல் 5 வயது வரையிலான குழந்தைகள், 18 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் விபரங்கள் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரேசன் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் குழந்தைகள், பள்ளி மாணவ மாணவியரின் விபரங்கள் இடம் பெற உள்ளது.

மின் ஆளுமை அதிகாரி ஒருவர் கூறுகையில், மக்களுக்கு 5 வயது குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க தேவை இருக்குமா? என்ற குழப்பங்கள் இருந்தன. அந்த குழப்பம் தேவை இல்லை. கட்டாயம் குழந்தைகளுக்கும் ஆதார் எடுக்க வேண்டும். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர்.

5 வயது குழந்தைகளுக்கான ஆதார விபரப்பணிகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலவலர்கள் கவனிக்க உள்ளனர். இப்பணியை ஏப்ரல் முதல் வாரத்தில் முடித்துக் கொடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.

Similar News