செய்திகள்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் பெய்த மழையால் 3 நாட்களாக எரிந்த காட்டுத் தீ அணைந்தது

Published On 2017-03-06 10:21 IST   |   Update On 2017-03-06 10:21:00 IST
சத்தியமங்கலம் வனப்பகுதியில் நேற்று மாலை மற்றும் இரவு பெய்த திடீர் கோடை மழையால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் எரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த சில நாட்களாகவே 100 டிகிரி வெயில் வாட்டி எடுத்தது.

இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் திடீரென மேகக்கூட்டங்கள் சூழ்ந்து வந்தது. ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது.

அதே சமயம் வனப்பகுதிகளான சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி மற்றும் கடம்பூர் வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த மழை கொட்டியது.

வனவிலங்குகளுக்கு தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் நேற்று மாலை மற்றும் இரவு பெய்த பலத்த மழையால் காட்டுக்குள் தண்ணீர் அருவி போல் பெருக்கெடுத்து ஓடியது.

சத்தியமங்கலம் மற்றும் டி.என்.பாளையம் வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டுத்தீ எரிந்து கொண்டிருந்தது. இந்த தீயை வனத்துறையினர் கட்டுப்படுத்தி அணைத்தாலும் தொடர்ந்து தீ எரிந்து கொண்டேதான் இருந்தது.

நேற்று மாலை மற்றும் இரவு பெய்த திடீர் கோடை மழையால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிடித்து எரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

சுமார் ஒருமணி நேரம் பெய்த இந்த பலத்த மழையால் ஈரோடு மாவட்ட வனப்பகுதி ‘ஜிலிர்’ என குளிர்ச்சியாக காணப்பட்டது.

Similar News