செய்திகள்

காதலி கழுத்தில் திடீரென தாலி கட்டிய வாலிபர்

Published On 2017-02-28 17:23 IST   |   Update On 2017-02-28 17:23:00 IST
ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்தபோது காதலி கழுத்தில் திடீரென தாலி கட்டிய வாலிபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு:

ஈரோடு மாணிக்கம் பாளையம் ராஜ் நகரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் விஜய் (வயது 23). வீரப்பன் சத்திரம். பண்ணக்காட்டை சேர்ந்த வரதராஜன் என்பவரது மகள் இந்துமதி (22.)

விஜய்யும் இந்துமதியும் 9-ம் வகுப்பு படிக்கும்போதே காதலித்து வந்தார்களாம். இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர்.

ஆனால் இவர்களின் காதலுக்கு இந்துமதி வீட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

காதலனை திருமணம் செய்யக்கூடாது என்று கூறினர். எனினும் இந்துமதியோ காதலனை கைபிடிக்க முடிவோடு இருந்தார்.

இந்த நிலையில் இந்துமதி வீட்டை விட்டு வெளியேறினார். பவானி கூடுதுறையில் நண்பர்கள் முன்னிலையில் விஜய், இந்துமதி திருமணம் நடக்க இருந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் இந்துமதி பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்தனர். தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்தினர். சம்பவ இடத்துக்கு பவானி மகளிர் போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் காதலர்கள் மற்றும் இரு தரப்பினரையும் ஈரோடு போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு வந்த காதலர்களை போலீசார் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.மகளிர் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெண் வீட்டார், “இந்துமதி கழுத்தில்தான் தாலி கட்டவில்லையே.. அதனால் எங்கள் பெண்ணை எங்களிடம் ஒப்படையுங்கள்” என்று கூறினர்.

இதனால் போலீசார் காதலர்களை போலீஸ் நிலையம் உள்ளே வைத்து விசாரித்து கொண்டிருந்தனர்.

அப்போது தன் பையில் வைத்திருந்த தாலி கயிற்றை திடீரென விஜய் எடுத்து காதலி கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு போட்டார். “தாலி கட்டிவிட்டேன் நாங்கள் திருமணம் செய்து விட்டோம்” என்று கூறினார்.

ஆனால் இதற்கு பெண் வீட்டில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தாலி கட்டாமல் தான் இருந்தனர். எப்படி இப்போது தாலி கட்டினார்? எங்கள் பெண்ணை எங்களுடன் அனுப்புங்கள்” என்று கூறினர்.

இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்தனர்.

பிறகு போலீசார் இந்துமதியிடம் கேட்டபோது, “நான் என் காதலனுடன் தான் செல்வேன்” என்று திட்ட வட்டமாக கூறினார்.

இதை தொடர்ந்து காதல் ஜோடியை போலீசார் சேர்ந்து வாழ அனுப்பி வைத்தனர்.

ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த காதல் போராட்டம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News