செய்திகள்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது

Published On 2017-02-27 09:02 GMT   |   Update On 2017-02-27 09:02 GMT
சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. மொத்தம் 250 பேர் வனப்பகுதிக்குள் புகுந்து வனவிலங்கு கணக்கெடுப்பு பணியை தொடங்கினர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. முன்னதாக நேற்று சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தில் கணக்கெடுக்கும் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் வனப்பகுதிக்குட்பட்ட ஆசனூர், தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், கேர்மாளம், தலமலை, டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகத்தில் இன்று கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

ஒவ்வொரு பகுதிக்கும் தலா 5 பேர் கொண்ட குழுவினர் காட்டுக்குள் இன்று காலை 6 மணிக்கு புகுந்தனர். மொத்தம் 250 பேர் வனப்பகுதிக்குள் புகுந்து வனவிலங்கு கணக்கெடுப்பு பணியை தொடங்கினர்.

இவர்கள் நீர்நிலைகளில் உள்ள விலங்குகளின் எச்சம், கால்தடங்கள் ஆகியவற்றை வைத்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று காலையில் நடந்த இந்த பணியில் தலமலை, கேர்மாளம் ஆகிய வனத்தில் புலி மற்றும் சிறுத்தைகளை நேரில் பார்த்ததாக கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்தனர்.

Similar News