செய்திகள்

ரகசிய வாக்குகெடுப்பு நடத்த அனுமதித்திருக்க வேண்டும்: திருமாவளவன்

Published On 2017-02-24 09:55 IST   |   Update On 2017-02-24 09:55:00 IST
தமிழக சட்டசபையில் ரகசிய வாக்குகெடுப்பு நடத்த அனுமதித்திருக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஈரோடு:

ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் செயலாளர் சிறுத்தை வள்ளுவன் இல்ல திருமண விழா பவானியில் நடந்தது.

இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பிறகு ஈரோடு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது திருமாவளவன் கூறியதாவது-.

தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரத்தில் நடந்த சம்பவம் வேதனை அளிக்க கூடியது. சட்டசபையில் பிரதம எதிர்க்கட்சியாக தி.மு.க.உள்ளது. அந்த எதிர்க்கட்சியின் கருத்துக்கு சபாநாயகர் மதிப்பளித்திருக்க வேண்டும். ரகசிய வாக்குகெடுப்பு நடத்தி இருக்க வேண்டும்.

அதே சமயம் சட்ட சபையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவரது கையை பிடித்து இழுத்து மைக்கை உடைத்த சம்பவமும் ஜனநாயகத்துக்கு எதிரானது.

சசிகலாவும்,ஓ.பின்னீர் செல்வமும் ஒன்றாக இருந்த போது அ.தி.மு.க.பொதுச் செயலாளராக சசிகலா அறிவிக்கப்பட்ட போது அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.ஆனால் இப்போது இருவரும் பிரிந்து விட்டனர்.

இதனால் இருவருக்கும் இப்போது எனது ஆதரவு இல்லை.விவசாயிகளுக்கு அறிவிக்கபட்ட வறட்சி நிவாரணம் குறைவாக உள்ளது. எனவே இந்த வறட்சி நிவாரணத்தில் கூடுதல் தொகை ஓதுக்கீடு செய்து அறிவிக்க வேண்டும்.

பவானி ஆற்றில் கேரள அரசு அணை கட்டுவதை கண்டித்து வரும்12-ந் தேதி கொங்கு மண்டல விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கேரள மாநிலத்துக்கு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தும் மறியல் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News