செய்திகள்

பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்: ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு

Published On 2017-02-23 07:31 GMT   |   Update On 2017-02-23 07:31 GMT
சிதம்பரம் அருகே பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்தது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கீரப்பாளையம் ஒன்றியம் வெய்யலூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

தற்போது சிதம்பரத்தை சேர்ந்த அம்பேத்கார் தலைமை ஆசிரியராக (பொறுப்பு) உள்ளார். பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்தனர்.

சம்பவம் குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறினர். அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இந்த தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேசுக்கு தெரியவந்தது. அவர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி சிதம்பரம் ஆர்.டி.ஓ. விஜயலட்சுமி, கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி பாலமுரளி ஆகியோர் வெய்யலூர் அரசு பள்ளிக்கு இன்று சென்றனர். அங்கு அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News