செய்திகள்

அ.தி.மு.க. அமைச்சர் நீலோபர் கபிலுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு

Published On 2017-02-21 10:13 GMT   |   Update On 2017-02-21 10:13 GMT
வேலூர் மாவட்டத்தில் சசிகலா அணிக்கு ஆதரவளித்து வரும் அ.தி.மு.க. அமைச்சர் நீலோபர் கபிலுக்கு பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கடும் வார்த்தைகளால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வாணியம்பாடி:

வேலூர் மாவட்டத்தில் சசிகலா அணிக்கு ஆதரவளித்து வரும் அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பன்னீர்செல்வம், தீபா ஆதரவு அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் கடும் வார்த்தைகளால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் நீலோபர் கபிலை வாணியம்பாடி தொகுதிக்குள் விடமாட்டோம் என தெரிவித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியது போல புகைப்படங்களை பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

அமைச்சர் நீலோபர் கபில் தொகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்ததால் தொகுதி மக்கள் சார்பாக அரசியல் வாழ்வில் அகால மரணம் அடைந்து விட்டதை கோபத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இனி இவர் தொகுதி பக்கம் வந்தால் தக்க பாடம் கற்பிக்கப்படும். இவன் வாணியம்பாடி தொகுதி மானமுள்ள தமிழ் மக்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற கண்ணீர் அஞ்சலி துண்டு பிரசுரங்கள் வாணியம்பாடியில் வீடு வீடாக விநியோகம் செய்யப்படுவதாகவும், தகவல் பரவியுள்ளது.

இதேபோல் அமைச்சர் கே.சி.வீரமணியை காணவில்லை என ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். மக்கள் விரோத போக்கை கடைபிடித்த வீரமணியை தொகுதிக்குள் நுழைய விடமாட்டோம் என சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி மோகனுக்கு பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பகிரங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

செய்யாறில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தூசி மோகனை தொகுதிக்குள் வரவிடாமல் விரட்டியடிப்போம் என பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Similar News