செய்திகள்

மக்கள் ஆதரவு எங்களுக்கே உள்ளது - ஓ.பன்னீர் செல்வம்

Published On 2017-02-12 16:09 GMT   |   Update On 2017-02-12 16:09 GMT
சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகதான் உள்ளனர் என சசிகலா பேசிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் குண்டர்களால் துன்பப்படுத்தப்படுகிறார்கள் என்றும் மக்கள் ஆதரவு தனக்கு உள்ளதாகவும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக அரசியல் உச்சகட்ட பரபரப்பு நிலையை அடைந்துள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாகதான் உள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதாவால் உருவான இந்தக் கட்சிக்கு குந்தகம் ஏற்படுமே என அனைத்தையும் தாங்கிக் கொண்டேன். நான் வேண்டாம் எனக் கூறியும் முதல்வராக பொறுப்பேற்க சொல்லிவிட்டு பின்னர் அவமானப் படுத்தினார்கள். 15 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினரால் துன்பப்பட்டு வந்தேன். கட்சியைக் காப்பாற்றவே இந்த முடிவு எடுத்துள்ளேன். தனியாக நின்று நான் போராடுவதை பலர் பெருமையோடு பார்க்கின்றனர். மக்களின் ஆதரவு எங்கள் பக்கமே இருக்கின்றது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது ரத்த உறவான தீபாவை மருத்துவமனைக்குள் ஏன் அனுமதிக்கவில்லை? ஜெயலலிதா மரணமடைந்த பின்னரும் வாசலில் நின்று கதறிய தீபாவை வீட்டுக்குள் அனுமதிக்க சசிகலா ஏன் மறுத்தார்?

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைக்கப்பட்டுள்ள நிலையை ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. அங்கு எம்.எல்.ஏக்கள் 
துன்பப்படுத்தப்படுகின்றனர். தங்களுடன், குண்டர்கள் இருப்பதாக எம்.எல்.ஏக்கள் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தனர். அனைத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவும் என் பக்கம் தான் இருக்கின்றது. எங்களது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிப்போம்.

சசிகலா முதல்வராக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை சசிகலாவின் உறவினர்களை அனுமதிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்கு இல்லை என்பதால்தான் அவர்களால் சுதந்திரமாக முடிவெடுக்க முடிகிறது.

இவ்வாறு பேசினார்.

Similar News