செய்திகள்

சினிமாவை மிஞ்சும் சம்பவம்: தந்தையை தாக்கி இளம்பெண் கடத்தல்

Published On 2017-02-11 08:10 IST   |   Update On 2017-02-11 08:21:00 IST
கடலூர் அருகே தந்தையை தாக்கி விட்டு இளம்பெண்ணை காரில் கடத்திய சம்பவம் குறித்து 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் தைப்பூச ஜோதி தரிசனத்திற்காக வடலூருக்கு தனது தந்தையுடன் ஒரு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கு தரிசனம் செய்துவிட்டு அதே மொபட்டில் வீட்டுக்கு திரும்பினார். குருவப்பன்பேட்டை அய்யனார்கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக ஒரு காரில் வந்த 4 பேர் திடீரென இளம் பெண் வந்த மொபட்டை வழிமறித்தனர்.இதையடுத்து காரில் இருந்து இறங்கிய 4 பேரும், அந்த பெண்ணின் தந்தையை சரமாரியாக தாக்கினார்கள். பின்னர், அந்த இளம்பெண்ணை அவர்கள் காரில் கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இளம் பெண்ணின் தந்தை குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகளை நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து கிராமத்தை சேர்ந்த குமார் என்கிற உதயகுமார், வரதராஜன்பேட்டையை சேர்ந்த சங்கர் ஆகியோர் மேலும் 2 பேருடன் சேர்ந்து கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தப்பட்ட இளம்பெண்ணையும், குமார் என்கிற உதயகுமார் உள்ளிட்ட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். சினிமா காட்சிபோல் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Similar News