செய்திகள்

செல்போன் டவரில் தூக்கிட்ட சமூக ஆர்வலர் மீது வழக்கு

Published On 2017-02-10 07:11 GMT   |   Update On 2017-02-10 07:11 GMT
திருவண்ணாமலை அருகே தற்கொலைக்கு முயன்றதாக சமூக ஆர்வலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த வெறையூர் பவித்ரம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 35). சமூக ஆர்வலர். இவர், தங்கள் கிராமத்தில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரியும், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்துள்ளார்.

அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் சமூக ஆர்வலர் வைத்தியலிங்கம் நேற்று அதிகாலை 4 மணிக்கு அப்பகுதியில் உள்ள 150 அடி உயர செல்போன் டவரில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அதிர்ந்து போன கிராமமக்கள், வெறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதிகாரிகள், போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமூக ஆர்வலரிடம் சமரசம் பேசினர். அதிகாரிகளின் பேச்சுக்கு வைத்தியலிங்கம், உடன்படவில்லை. காலை 11 மணியளவில் டவரிலேயே வேட்டியால் தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து, உடனடியாக தீயணைப்புத்துறை வீரர் சதீஷ்குமார் (26) டவர் மீது வேகமாக ஏறி தூக்கில் தொங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வைத்தியலிங்கத்தை தோள் கொடுத்து காப்பாற்றினார். மற்றொரு தீயணைப்பு வீரர் குருமூர்த்தியும் டவரில் ஏறி தூக்குப் போட்ட வேட்டியை அவிழ்த்து எடுத்தார்.

சமூக ஆர்வலர் வைத்திய லிங்கம் மயக்கமடைந்தார். 2 தீயணைப்பு வீரர்களும் சேர்ந்து அவரை பத்திரமாக கீழே கொண்டு வந்தனர். தயாராக நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்சில் சமூக ஆர்வலர் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 8 மணி நேரத்திற்கு பிறகு சமூக ஆர்வலரின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சமூக ஆர்வலர் சிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளார். வைத்திய லிங்கம் மீது தென்மாத்தூர் வி.ஏ.ஓ. தனசேகர், வெறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தற்கொலைக்கு முயன்றதாக சமூக ஆர்வலர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News