செய்திகள்
கொள்ளை நடந்த வீடு

தேவகோட்டையில் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகை, 15 கிலோ வெள்ளி கொள்ளை

Published On 2017-02-08 10:21 IST   |   Update On 2017-02-08 10:21:00 IST
வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகை, 15 கிலோ வெள்ளி, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அண்ணா சாலையில் உள்ள வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிங்கமுகம். இவரது மனைவி உமாசெல்வி (வயது 32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சிங்கமுகம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், உமாசெல்வி தனது மகள்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், உறவினர் வீட்டு விசே‌ஷத்திற்காக உமாசெல்வி தனது குடுமபத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தென்னம்பூவயல் கிராமத்திற்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நேற்று நள்ளிரவு அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் மறைவான இடத்தில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 60 பவுன் நகை, 15 கிலோ வெள்ளி, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

இன்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்த தகவலை உமாசெல்விக்கு தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது நகை, வெள்ளி, பணம் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.

கொள்ளை சம்பவம் குறித்து அவர், தேவகோடடை டவுன் போலீசில் புகார் தெரிவித்தார். டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் சிவகங்கையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

தேவகோட்டை பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News