செய்திகள்

வார்தா புயலால் பாதிப்பு: வண்டலூர் பூங்கா 10-ந்தேதி திறப்பு

Published On 2017-02-05 10:54 IST   |   Update On 2017-02-05 10:54:00 IST
கடந்த டிசம்பர் மாதம் வார்தா புயலால் சேதமடைந்த வண்டலூர் உயிரியல் பூங்கா வருகிற 10-ந்தேதி திறக்கப்படுகிறது.

சென்னை:

கடந்த டிசம்பர் மாதம் வார்தா புயல் சென்னை நகரை தாக்கியது. நகர் முழுவதும் மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன.

வண்டலூர் உயிரியல் பூங்காவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கிருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்து விழுந்தன. விலங்குகள் அடைக்கப்பட்டிருந்த இடங்களும் சேதம் அடைந்தது. கூண்டுகள் மேற்கூரைகள் உடைந்தன.

இதையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் விழுந்த மரங்களை அகற்றும் பணியும் சீரமைப்பு பணியும் நடந்து வந்தது. மரங்களை துண்டு துண்டாக வெட்டி பூங்காவில் ஒரு இடத்தில் குவித்து வைத்தனர்.

ஏராளமான மரங்கள் விழுந்ததால் அதனை அகற்றும் பணியில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் பொங்கல் பண்டிகைக்குள் சீரமைப்பு பணிகள் முடிந்து பூங்கா திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால் பொங்கல் பண்டிகைக்கு பூங்கா திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் பூங்காவில் சீரமைப்பு பணிகள் முடிந்து உள்ளது. அங்கு சுமார் 3000 டன் மரக்கழிவுகள் அகற்றப்பட்டன. விலங்குகள் இருந்த இடங்கள், கூண்டுகள், மேற் கூரைகள் சீரமைக்கப்பட்டு பணிகள் முடிந்து இருக்கிறது.

இதையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா வருகிற 10-ந்தேதி திறக்கப்படுகிறது.

இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, அவர் கூறுகையில், வண்டலூர் பூங்காவில் புயலால் சரிந்த மரங்கள் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளன. கூண்டுகள், மேற்கூரைகள் போன்ற சீரமைப்பு பணி முடிந்து பார்வையாளர்கள் வந்து செல்ல வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் வருகிற 10-ந் தேதி வண்டலூர் பூங்கா திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புயலால் சேதமடைந்த வண்டலூர் பூங்கா 2 மாதத்துக்கு பிறகு திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Similar News