செய்திகள்

கடலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-02-03 09:44 IST   |   Update On 2017-02-03 09:44:00 IST
கடலூர் சிறையில் இன்று ஆயுள் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:

கடலூர் கேப்பர்மலையில் மத்திய சிறை சாலை உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கீழக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 57). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 8-ம் எண் அறையில் இருந்தார்.

இன்று காலை சிறை அதிகாரிகள் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ராஜமாணிக்கம் தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கடலூர் சிறை அதிகாரிகளும், முதுநகர் போலீசாரும் விசாரணை நடத்தினர்.

அப்போது கைதி ராஜ மாணிக்கம் அவர் தங்கியிருந்த அறையில் மின்விசிறி மாட்டும் கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை.

சிறையில் கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் சிறையில் அடிக்கடி செல்போன், சிம்கார்டு, கஞ்சா போன்றவை பறிமுதல் செய்யப்படுவதும், கைதிகள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

உயர் அதிகாரிகள் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்து கைதிகளின் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News