செய்திகள்
தடை செய்யப்பட்ட மீன்பாடி வண்டியை பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் டிராபிக் ராமசாமி ஒப்படைத்தார்.

விழுப்புரம்- கடலூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மீது வழக்கு: டிராபிக் ராமசாமி

Published On 2017-01-31 13:40 IST   |   Update On 2017-01-31 13:40:00 IST
விதிமுறைகளை மீறியர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விழுப்புரம்-கடலூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மீது வழக்கு தொடர உள்ளேன் என்று டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி:

சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பண்ருட்டிக்கு காரில் வந்தார். அப்போது அந்த வழியாக மீன்பாடி வண்டி ஒன்று வந்தது. அதில் அதிக அளவில் இரும்பு தகடுகள் ஏற்றப்பட்டிருந்தன. எனவே அந்த வண்டியை டிராபிக் ராமசாமி நிறுத்தினார்.

அதிகமாக பாரம் ஏற்றி வந்தது ஏன்? என்று வண்டி ஓட்டிவந்தவரிடம் கேட்டார். பின்னர் பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்கு மீன்பாடி வண்டியை கொண்டு சென்றார். இதனை அறிந்த டிராபிக் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்களிடம் டிராபிக் ராமசாமி விதிமுறைகளை மீறிய மீன்பாடி வண்டி மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்ய வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மீன்பாடி வண்டியை பறிமுதல் செய்தனர். பின்னர் டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

விழுப்புரம் அருகே கோலியனூர் ரவுண்டானாவில் விதிகளை மீறி டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது குறித்து புகார் செய்துள்ளேன். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மீது வழக்கு தொடர உள்ளேன்.

இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் தடை செய்யப்பட்ட மோட்டாருடன் இயங்கும் மீன்பாடி வண்டிகள் மீது நடவடிக்கை எடுக்காத கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மீது வழக்கு தொடர உள்ளேன்.

ஏப்ரல் மாதத்திற்குள் அரசியல் மாற்றம் ஏற்படுவதற்காக கருப்பு பேட்ஜ் அணிந்து வருகிறேன். பிப்ரவரி மாதம் 24-ந் தேதி தமிழ்நாடு இளைஞர்கள் மாநாடு என் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்த மாநாடு நடைபெறுகிறது. அதிகளவு இளைஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மீன் பாடி வண்டி தொடர்பாக ஏற்கனவே திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கு தொடர்ந்திருந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மக்கள் பாது காப்பு பொதுச்செயலாளர் பாத்திமா உடன் இருந்தார்.

Similar News