செய்திகள்

மத்திய அரசு தூண்டுதல் காரணமாக மாணவர்கள் மீது தடியடி: தமிழக அரசு மீது முத்தரசன் குற்றச்சாட்டு

Published On 2017-01-28 09:55 GMT   |   Update On 2017-01-28 09:55 GMT
மத்திய அரசின் தூண்டுதலின் காரணமாக மாணவர்கள் மீது காவல் துறை மூலம் மாநில அரசு தடியடி நடத்தியதாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டி உள்ளார்.

மதுரை:

ஜல்லிக்கட்டை நடத்த மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையினர் திடீர் தடியடி நடத்தினர்.

இந்த சம்பவத்தை கண்டித்து மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று போராடியவர்களை கடந்த 23-ந்தேதி அதிகாலை போலீசார் தடியடி நடத்தி அமைதி போராட்டத்தை வன்முறை களமாக்கினர். குடிசைகள் மற்றும் ஆட்டோக்களுக்கு போலீசாரே தீ வைத்து எரித்தனர்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் போலீசாரே வன்முறையில் ஈடுபட தூண்டியவர்கள் யார்? மத்திய அரசு தூண்டுதல் காரணமாக மாநில அரசு காவல்துறை மூலம் மாணவர் போராட்டத்தை நசுக்க தடியடி நடத்தியதாக கருதுகிறோம். இது கண்டிக்கத்தக்கது.

தடியடியில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை, நிவாரணம் வழங்க வேண்டும். கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News