செய்திகள்

ஜல்லிக்கட்டை தடைசெய்ய சட்டத்துக்கு இடமில்லை: இந்து முன்னணி அமைப்பாளர் திட்டவட்டம்

Published On 2017-01-19 20:41 IST   |   Update On 2017-01-19 20:41:00 IST
ஜல்லிக்கட்டு என்பது நமது தேசத்தினுடைய பாரம்பரியமான ஒரு விளையாட்டு.இது விளையாட்டு அல்ல,இது ஒரு கோவில் வழிபாடு என்று இந்து முன்னணி அமைப்பாளர் கூறினார்.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டத்தில் இந்து முன்னனி  மாவட்ட செயற்குழு  கூட்டம்  நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமை      தாங்கினார். பா.ஜ.க. மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட பொது செயலாளர்   மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில இணை அமைப்பாளர்  பொன்னையன் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஜல்லிக்கட்டு என்பது நமது தேசத்தினுடைய பாரம்பரியமான ஒரு விளையாட்டு. இது விளையாட்டு அல்ல, இது ஒரு கோவில் வழிபாடு. இது  விளையாட்டு  என்று சொல்வதால் நாம்  தோற்று விடுகிறோமோ என்ற சந்தேகம் வருகிறது. இது உண்மையிலேயே குலதெய்வங்களுடைய வழிபாடுதான். இந்த வழிபாடுகளில் தலையிட எந்த  கோர்ட்டுக்கும்,  எந்த சட்டத்துக்கும் இடமில்லை. இந்த வழிபாடு நடக்க இந்து முன்னணி  ஆதரவு  தெரிவிக்கும்.

அமெரிக்காவை  சேர்ந்த பீட்டா அமைப்பை உடனே தடைசெய்ய வேண்டும். இது ஒருதனிப்பட்ட அமைப்பினுடைய கைக்கூலி நிறுவனமாகும். அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் எப்படி   போராடினார்களோ அதேபோல் ஜல்லிக்கட்டிற்காக போராடி இருக்க வேண்டும். இவர்களின் சுயநலத்தால் தமிழகம் ஜல்லிக்கட்டை இழந்தது.

ஜல்லிக்கட்டு நடக்க வேண்டுமானால் கோர்ட்டில் வழக்கு தொரட வேண்டும். மத்திய  அரசை வலியுறுத்தி போராட வேண்டும். இந்த ஜல்லிக்கட்டை  மையமாக வைத்து பலகட்சிகள் அரசியல் செய்கின்றனர். மத்திய அரசை குறைகூறி தப்பித்துக் கொள்ள நினைக்கிறார்கள். அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி போராடவேண்டும்.

ஆந்திரா,  மகாராஷ்டிராவில் முதல்வர் உட்பட அனைவரும் இறங்கி  போராடியதால் வெற்றி கிடைத்தது. இங்கு  தங்களுடைய  பதவியை காப்பாற்றி கொள்ளவும், தங்களுடைய பணத்தை பாதுகாத்துக் கொள்ளவும் தான் நினைக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அவரே  இறங்கி  ஜல்லிக்கட்டு விட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் இந்து முன்னணி  மாவட்ட  தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News