செய்திகள்

ஜல்லிக்கட்டு பிரச்சினையால் பாரதீய ஜனதா பிரமுகர் தி.மு.க.வில் இணைந்தார்

Published On 2017-01-18 10:38 GMT   |   Update On 2017-01-18 10:38 GMT
ஜல்லிக்கட்டு பிரச்சினையால் பாரதீய ஜனதா பிரமுகர் தி.மு.க.வில் இணைந்தார்.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் (44). பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

இவரது மனைவி மணிமேகலை. இவர் பாரதீய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என்று தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறி வந்த நிலையில் கடைசி நேரத்தில் பிரச்சினை நீதி மன்றத்தில் இருப்பதால் எதுவும் செய்வதற்கில்லை என்று கை கழுவியதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் பாரதீய ஜனதா கட்சியிலிருந்து விலகி கொள்ளிடம் மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் ரவிக்குமார் தலைமையில் தி.முக.வில் சேர்ந்தனர். அவர்களுக்கு உடனடியாக தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

பக்தவச்சலம் கடந்த 30 ஆண்டுகளாக இந்து முன்னணி மற்றும் பாரதீய ஜனதாவில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News