செய்திகள்

விருதுநகரில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் 63 பவுன் நகை கொள்ளை

Published On 2017-01-09 10:36 IST   |   Update On 2017-01-09 10:37:00 IST
அ.தி.மு.க. ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் வீட்டின் கதவை உடைத்து 63 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
விருதுநகர்:

விருதுநகர் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் மச்சராஜா. ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இவர், அ.தி.மு.க. ஒன்றிய இலக்கிய அணி செயலாளராக உள்ளார்.

2 மாடிகள் கொண்ட வீட்டின் கீழ்தளத்தில் இவரது அலுவலகம் செயல்பட்டு வருகிறது. முதல் மாடியில் வீட்டு உரிமையாளர் உள்ளார். 2-வது மாடியில் மச்சராஜா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது மனைவி தமிழ்ச்செல்வி, முன்னாள் யூனியன் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவார். நேற்று முன்தினம் (7-ந்தேதி) மச்சராஜா குடும்பத்துடன் சென்னையில் ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்று விட்டார்.

இதனை அறிந்த யாரோ மர்ம மனிதர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். இன்று காலை வீடு திரும்பிய மச்சராஜா, கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 63 பவுன் நகை, வெள்ளிக்கொலுசு போன்றவை கொள்ளை போய் இருந்தது.

இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மச்சராஜாவின் அலுவலகம் மற்றும் முதல் மாடி வீட்டிலும் கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. முதல் மாடியில் வீட்டு உரிமையாளர் இல்லாததால் அங்கு பெரிய அளவில் பொருட்கள் எதுவும் இல்லை.

கொள்ளை குறித்து தகவல் கிடைத்ததும் காவல் துணை கண்காணிப்பாளர் குமார் சம்பவ இடம் வந்து ஆய்வு செய்தார். தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டின் அருகிலேயே கிழக்கு போலீஸ் நிலையம் உள்ளது. அதே தெருவில் அல்லம்பட்டி முக்கு ரோடு சந்திப்பில் போலீஸ் சோதனை சாவடியும் உள்ளது. அப்படி இருந்தும் இந்த துணிகர கொள்ளை நடந்து இருப்பது விருதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News